விண்வெளிக்கு செல்வது தற்போது விருந்துக்கு செல்வது போல் அதிகரித்து வருகிறது. ஆனால் 50 வருடங்களுக்கு முன்பு நிலைமை அவ்வாறு இருந்ததாக தெரியவில்லை. எனவே மனிதன், பல வகையான விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பி வந்தான்.
நாய், குரங்கு, முயல், எலி ஆகியவை இந்த விண்வெளி பயணத்தில் சென்று வந்த விலங்குகள் ஆகும். அந்த விலங்குகளில் ரஷ்யாவைச் சேர்ந்த லைகா என்னும் நாய் குறிப்பிடத்தக்கது ஆகும். இது 1957 ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஸ்புட்னிக் 2 என்ற விண்கலத்தில் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த விண்கலம் திரும்பவும் பூமிக்கு வருவதற்கான வழிமுறைகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் லைகாவின் வாழ்வு அத்தோடு முடிந்து போனது. பின்னர் 1960, ஆகஸ்ட் 9ல் ஸ்டிரெல்கா மற்றும் பெல்கா என்ற இரு நாய்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
மே 28, 1958ல் ஏபில் என்ற ரீசஸ் இன குரங்கும், பேக்கர் என்ற ஸ்குரில் இன குரங்கும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. பின்னர் அவை இரண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வந்தன. இதில் அனஸ்தீசியா பிரச்சனையால் ஏபில் ஆனது சில நாட்களில் சிகிச்சையளித்தும் இறந்து போனது. இதற்கு முன் இதே போல் முதன்முதலாக ஆல்பர்ட் என்ற ரீசஸ் இன குரங்கு 1949 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏபில் உடன் சென்ற பேக்கர் 27 வயது வரை வாழ்ந்து 1984ல் மறைந்தது.
1959 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒட்வஷ்னயா மற்றும் ஸ்நெசின்கா என்னும் இரு நாய்கள் மற்றும் மர்ஃபுஷா என்ற முயல் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த முயல் லிட்டில் மார்த்தா என்றும் அழைக்கப்பட்டது. இதில் வீரம் மிகுந்த என்ற பொருள் கொண்ட ஒட்வஷ்னயா ஐந்து முறை விண்ணில் பயணம் செய்து உள்ளது. ஜனவரி 21, 1960ல் மிஸ். சாம் என்ற ரீசஸ் இன குரங்கு நாசா அமைப்பால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 19, 1960ல் பயிற்சி பெற்ற இரு ரஷ்ய நாய்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பி வந்தன. இதில் இன்னொரு விசயம் அவைகளோடு ஒரு முயல், 40 சுண்டெலிகள், இரண்டு எலிகள், பூச்சிகள் மற்றும் தாவரங்கள் ஆகியவையும் சேர்த்து அனுப்பப்பட்டன.
சில நாட்களுக்குப் பின்னர் நாசா அமைப்பானது ஹாம் என்ற பெயரிடப்பட்ட சிம்பன்சி இன குரங்கு விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டது. இது மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தது ஆகும். மணிக்கு 1500 மைல்கள் வேகத்தில் 42 மைல்கள் உயரத்திற்கு ஹாம் சென்றது. உடலில் நீர் இழப்பு, லேசான மயக்கம் போன்றவற்றை தவிர அது பிரச்சனையின்றி நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது. 1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரான்சு நாடு பூனையை தன்னுடைய வெரோனிக் செயற்கைகோள் உதவியால் விண்வெளிக்கு அனுப்பியது. நாசா அமைப்பானது குரங்குகள் விண்வெளியில் நீண்ட காலம் இருக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய முடிவெடுத்தது. எனவே, 1985ல் பெயரிடப்படாத இரண்டு ஸ்குரில் இன குரங்குகள் மற்றும் 2 டஜன் அல்பினோ எலிகளையும் தன்னுடைய சேலஞ்சரில் அனுப்பியது. அவை இரண்டும் பத்திரமாக திரும்பியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக