நம்மை சுற்றிப் பார்த்தால் நாம் ஒரு விளம்பர உலகில் இருப்பதை நன்கு உணரலாம். ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதில் விளம்பரம் பெரும் பங்கு வகிக்கிறது. தற்பொழுது விளம்பர உலகம் சற்றே மாறி உள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தங்களுடைய நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதில் அவை பல்முனை போட்டிகளை சந்தித்து வருகிறது. விளம்பர நிறுவனங்கள் புதிய யுக்திகளை கொண்டு புதிய தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கு இன்டர்நெட் என்னும் சாதனத்தை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது.
பெரும்பாலான விளம்பரங்களில் பெண் விளம்பர மாடல்கள் தோன்றுவதை நாம் கவனித்திருக்கலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 60 சதவிகித விளம்பரங்களில் பெண்களே அதிகம் தோன்றுகின்றனர் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. விளம்பர நிறுவனங்கள் ஆண் நடிகர்களை கொண்டு ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்துவதைக் காட்டிலும் பெண் நடிகர்களை கொண்டு அந்த தயாரிப்பை சந்தைப்படுத்தும் பொழுது அது வெகு விரைவாக வாடிக்கையாளர்களை சென்று சேர்கிறது என்று கருதுகின்றன. ஆண்களின் சவர கிரீம்கள், உள்ளாடைகள் ஆகிய தயாரிப்புகளின் விளம்பரங்களில் கூட அதிகமாக பெண்களே இடம் பிடித்து உள்ளனர். உளவியல் ரீதியாக இவை அதிகமான ஆண் வாடிக்கையாளர்களை கவரும் மற்றும் தங்களின் விற்பனையை அதிகரிக்கும் என்ற அடிப்படையில் விளம்பர நிறுவனங்கள் இவ்வகை முயற்சிகளை மேற்கொள்கின்றன.
ஒரு ஆராய்ச்சியானது 55 சதவிகித ஆண்கள் இயல்பிலேயே பெண்களிடம் பேச மற்றும் பழக விரும்பும் எண்ணம் கொண்டவர்கள் என்று தெரிவிக்கிறது. அவர்கள் ஆண்களிடம் பேசுவதைக் காட்டிலும், அதிகமாக பெண்களிடம் பேசுவதையே விரும்புகின்றனர் என்பதை விளம்பர நிறுவனங்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. எனவே பெண் நடிகர்களை தங்களின் விளம்பரத்தில் நடிக்க வைக்கும் பொழுது அவை எளிதாக தங்களின் தயாரிப்புகளை பெரும்பாலான ஆண்களிடம் சென்று சேர்க்கிறது.
ஆண்களுக்கான தயாரிப்புகளான வாசனை திரவியங்கள், சவர கிரீம்கள், சவரத்திற்கு பின் பூசும் கிரீம்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றின் விளம்பரங்களுக்கும் அதிகமாக பெண்களே நடிக்க வைக்கப்படுகின்றனர். இருப்பினும், விளம்பர நிறுவனங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது நாங்கள் அவர்களை தவறாக பயன்படுத்தவில்லை என்று கூறுகிறது. உதாரணமாக, ஆக்ஸ் எனப்படும் வாசனை திரவியம் பற்றிய விளம்பரங்களில் பெண் நடிகைகள் ஆண் நடிகர்களுடன் தோன்றுகின்றனர். இந்த தயாரிப்பினை பயன்படுத்தும் பொழுது அது அதிகமான பெண்களை கவரும் தன்மை வாய்ந்தது என்பதை எடுத்து காட்டுவதற்காகவே இவ்வாறு விளம்பரப்படுத்தப்படுகிறது என்கின்றனர். பாஸ் ஹியுகோ மற்றும் வைல்ட் ஸ்டோன் ஆகிய விளம்பரங்களில் மனைவிமார்கள், பக்கத்து வீட்டு பெண்கள் உள்பட கவரப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சந்தையில் தங்களின் தயாரிப்புகளுக்கு அதிகமான தேவையிருப்பதை வளப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகும்
.ஆனால் பெண்கள்- ஆண்களின் அடி மனது ஆசைகளையும், தாழ்வு மனப்பான்மையையும் அடிப்படையாக கொண்டே அனைத்து விளம்பரங்களும் அமைகின்றன.
மற்றொரு காரணமும் இதற்கு சொல்லப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான பொருள்களை ஆண்களை காட்டிலும் பெரும்பாலான பெண்களே கடைகளில் சென்று வாங்கி வருகின்றனர். எனவே அவர்களிடம் தங்களின் தயாரிப்புகளை எளிதாக எடுத்துச் சொல்வதற்கு பெண் நடிகைகளே உகந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு குடும்பத்தில் முக்கிய உறுப்பினரான பெண்களிடம் அவர்கள் சம்பந்தப்பட்ட உடல் ஆரோக்கியம் போன்ற விசயங்களுக்கு உடற்பயிற்சி செய்வது போல் பெண் நடிகைகள் விளம்பரங்களில் தோன்றுகின்றனர். இவை அவர்களை பெரிதும் கவர்கிறது. தங்களின் குடும்பத்தினை பேணி பாதுகாப்பதற்கு தங்களை கவனிப்பதும் அவசியம் என்பதை எளிதாக எடுத்துச் சொல்லப்படுகிறது. விளம்பர தயாரிப்பாளர்கள், தங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலோ அல்லது விளம்பர பலகைகளிலோ வரும் பொழுது அவை யாரை சென்று சேர்கிறது என்பதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இதனாலேயே சமையல் எண்ணெய், அழகு சாதன பொருட்கள், பெண்களின் ஆரோக்கியம் ஆகிய விளம்பரங்களில் பெண் நடிகைகளே அதிகம் தோன்றுகின்றனர்.
தற்பொழுது கணினி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு விளம்பரங்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இவை நகர மற்றும் கிராம மக்கள் என பல்வேறு தரப்பு மக்களை எளிதாக சென்று சேர்வதால் தொலைக்காட்சியினை விட அதிகமாக விளம்பரங்கள் இணைய தளத்தில் வெளிவர துவங்கி உள்ளன. மேலும் குறைந்த அளவு கொண்டவையாக இருந்தாலும் அவை பார்ப்பவரின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனாலேயே பிகினி பெண்கள், சூப்பர் மாடல்கள் ஆகியோர் பயன்படுத்தப்படுகின்றனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக